Apr 5, 2011

மசினகுடி -திகில் பயணம் தொடர் 2

பலத்த சந்தோசத்துடன் எங்கள் வாகனங்கள் காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது .சற்று தூர பயணத்தில் வனத்தின் இரு மருகிலும் கூட்டம் கூட்டமாக துள்ளி திரியும் மான்களும் ,தன் சுதந்திரத்தை காட்டும் விதமாக தோகைகளை விரித்து நடனமாடிகொண்டிருந்த மயில்களும் , மருட்சியான பார்வைகளால் எங்களை பார்த்ததும் ஒளிந்து கொண்ட முயல்களையும் ரசித்துகொண்டே மெதுவாக நகர்ந்தோம்.

சற்று தொலைவு நகர்ந்திருப்போம் சட்டென இடது பக்கத்தில் 10 அடி இடைவெளியில் 3 பெரிய யானைகள் நின்றுகொண்டிருந்தன அதில் ஒரு யானை கோபமாக எங்களை நோக்கி வர ஆரம்பித்தது சற்றும் எதிர்பார்க்காத எல்லோரும் பயத்தில் கத்திவிட்டார்கள்.என் கால்கள் அசுரகதியில் ஆக்சிலேடரை அழுத்தின.எங்கள் வாகனம் ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி பறந்தது. எல்லோர் வயிற்றிலும் ஒருவித பயம் கவ்விகொண்டது .ஒரு 5 நிமிட நிசப்தமான பயணம் மீண்டும் பரபரப்பில் தொடங்கியது
மறுபடியும் யானை கூட்டம் இந்த சமயம் குறைந்தது 10 காட்டு யானைகள் வழியின் இரு புறமும் மேய்ந்து கொண்டிருந்தது .
அதில் ஒரு யானை எங்கள் முன்னே ஒரு இரு சக்கர வாகனத்தை பிளிறலுடன் துரத்தி கொண்டிருந்தது .அப்படியே வாகனத்தை மிக மிக மெதுவாக்கிகொண்டோம் .ஏனென்றால் எங்கள் பின்னே ஒரு இடது புறத்தில் ஒரு யானை கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது.இரு சக்கர வாகனத்தை துரத்திய யானை சற்று பாதை கடந்தது மிகுந்த எச்சரிகையுடன் அந்த யானையை கடந்தேன் .எங்கள் சிகப்பு ஓம்னி என்னை மெதுவாக பின்தொடர்ந்தது .சிகப்பு ஓம்னி பார்த்தவுடன் மீண்டும் வாகனத்தை பின்னால் துரத்த ஆரம்பித்தது .( யானைக்கு சிகப்பு என்றால் பிடிக்காதாம் ) சற்று வேகமாக சாலை கடந்து விட்டோம் .


1 கி.மீ சென்றிருப்போம் ஒரு பலத்த பிளிறல் சப்தம் கேட்டேன் மெதுவாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவியிடம் நீ பிளிறல் சப்தம் கேட்டாயா? என்று கேட்டு கொண்டே ஒரு வளைவில் திரும்பினேன் .என் எதிரே ஒரு கார் நின்று கொண்டிருந்தது சுமார் 4 பேர் எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் பின்னே நான் கண்ட காட்சி அலறிவிட்டேன் .ஒரு பெரிய தந்தங்களை கொண்ட யானை பலத்த பிளிறலும் ,துதிக்கையை முன்னே நீட்டிக்கொண்டும் ,காதுகள் முறம் போல் விரித்து கொண்டும் ,அதன் வால் 90 டிகிரியில் பின்னே விரைத்துகொண்டும் அவர்களை துரத்திக்கொண்டு எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருகிறது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை .வேகமாக பின்னால் போகலாம் என்றால் என் பின்னே ஒரு பெரிய வேன் நின்று கொண்டுள்ளது .யானைக்கும் என் வாகனத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்து விட்டது .என் பலத்த கத்தலுக்கு பின் அவரும் பின்னால் வேகமாக செல்ல நானும் வேகமாக பின்னே நகர்ந்தேன் ஒரு கண நேரத்தில் யானை காட்டுக்குள் ஓடி விட்டது அப்போது தான் எங்கள் உயிரே வந்தது .


ஒரு பெரிய ஜுராசிக் பார்க்குக்குள் மாட்டிகொண்டதாக உணர்ந்தேன் .
என் ரத்தம் தாறுமாறாக ஓடியது ,உடலில் உள்ள அனைத்து செல்களும் போர் கால விழிப்பில் இருந்தது அப்போது உணர்ந்தேன் நான் செய்த மிக பெரிய தவற்றை இது போன்ற பாதுகாப்பற்ற இடத்திற்கு குழந்தை ,தாய் ,பெண்களை சுற்றுலா அழைத்துவந்தது .அச்சமயம் மணி மாலை 6:15 எங்களை இருள் கவ்வ துவங்கிவிட்டது.தொடரும்

Apr 3, 2011

மசினகுடி -ஒரு திகில் பயணம்கடந்த வெள்ளி அன்று விடியலின் கொஞ்சும் உதயத்துடன் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து ஊட்டி மழை அன்னையின் மடியில் தவழ இரு வாகனத்தில் பயணித்தோம் .செல்லும் வழியில் மேட்டுபாளையம் சாலை புகை மண்டலத்தை பல இருமல்களை தாண்டி மழை அரசியின் பாதமான கல்லார் அடைந்தோம் .

(என் புதல்வன் அவர் மாமாவுடன் உற்சாகமாக )

சற்று நேர ஓய்வுக்கு பின் மீண்டும் எங்கள் வாகனம் எங்களை சுமந்து வேகமான மூச்சு இரைச்சலுடன் மேல் நோக்கி பயணித்தது .செல்லும் வழியில் பள்ளத்தாக்குகளை ரசித்துகொண்டே மதியம் ஊட்டி சென்றடைந்தோம் எங்கள் வருகையை வரவேற்கும் விதமாக மேகங்கள் கறுத்து மழையை எங்கள் மேல் பொழிய இடிகளால் மிரட்டிகொண்டிருந்தது.குளிருந்த காற்றும்,பனிபோலிவும் எங்கள் மேல் படர்ந்து நனைத்துகொண்டிருந்தது.


சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து 1 கி .மீ தூரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தோம் .அங்கு முகம மலர்ந்த சிரிப்புடன் வனத்துறை அதிகாரி உயர்திரு .ஹாலன் அன்புடன் வரவேற்றார் .ஐயா அவர்கள் மிக்க கனிவான ,அன்பாக எங்களை உபசரித்தார் .நாங்கள் தங்க இருக்கும் மசினகுடி அபயாரண்யம் விடுதியின் ரசிதுகளை பெற்றுக்கொண்டு விடைபெற தயாரானோம் .

முக்கிய குறிப்பாக நாங்கள் மசினகுடி செல்ல இருக்கும் தலைகுந்தா ,கல்லட்டி ,பாதை மிக பயங்கரமான பள்ளத்தாக்கு என்றும் சரிவான பாதை என்றும் வாகனத்தை முதல் அல்லது இரண்டாம் கியரில் செல்ல எச்சரிக்கப்பட்டோம் .

எங்கள் வாகனங்கள் சந்தோசத்துடன் மழை சரிவை நோக்கி அதிக பட்ச எச்சரிகையுடன் மெதுவாக சரிந்துகொண்டு சென்றது .100 மீ இடைவெளியில் பல எச்சரிக்கை பலகைகள் (கவனமாக செல்லவும் ,மிக சரிவான ,ஆபத்தான பள்ளத்தாக்கு ,விபத்து பகுதி ,) என்று நம்மை எச்சரித்தன .36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி மசினகுடி கிராமத்தை அடைந்தோம் .

மிகுந்த திகில் மற்றும் ஆபத்து எங்கள் எதிரே மசினகுடி காட்டில் ஒளிந்து காத்திருப்பது அறியாமல் நாங்கள் சந்தோசத்துடன் சிரித்துகொண்டிருந்தோம்
அப்பா நான் ரெடி

நானும் ரெடி ஜூட்

தொடரும் .....,